Pages

Tuesday 2 March 2010

விண்ணைதாண்டிவருவாயா

இரண்டு நாட்களாகவே எனது நண்பர்களை நச்சரித்துக்கொண்டே இருந்தேன்  வாருங்கள் படத்திற்கு(விண்ணைதாண்டிவருவாயா) போகலாமென்று.  அது ஏன் என்று புரியவில்லை படத்தைப் பார்க்காமலேயேப் படத்தினைப்பற்றிய என் அனுமானங்கள் அதனை உயர்த்தியே பிடித்தன.  இது போல் எனக்கு என்றுமே தோன்றியதில்லை.  திரைப்படங்களை அதிகமாக பார்ப்பதில்லை. நண்பர்கள் அழைக்கும்பட்சத்தில் தவிற்க முடியாமல் சில நேரங்களில் செல்வேன். 

 படத்தினைப் பார்த்து முடித்தவுடன் மனதில் ஏற்பட்ட உணர்வு, உணர்வு என்று சொல்வதினை விடவும் அதனைவிட மிகச்சிறப்பான அதற்கு ஈடான ஒரு தமிழ்வார்த்தையை எண்ணிக்கொள்ளுங்கள்.
 ஆனால் அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றே தோன்றுகிறாது.  அதனை விவரிக்கும் அளவிற்கு எனக்கு எழுத்திலோ தமிழிலே புலமை கிடையாது.  முதல் காதலும் அதன்பின் வரும் தோல்வியும் என்றுமே மறக்கக்கூடியதல்ல என் அனுபவத்தில்.


 படத்தினைப் பார்த்து முடித்தவுடன் என்னுள் நான் உணர்ந்த என்னவென்று சொல்லத்தெரியாத அந்த உணர்வு இதை எழுதும் போதும் என்னைப் போட்டுத் தாக்குகின்றது.  அந்த உணர்வில் மகிழ்ச்சியும்,
சோகமும் கலந்தே இருக்கின்றது என்பதை நான் உணர்கின்றேன்.
இந்த வலி எனக்குப் பிடித்திருக்கின்றது.  

நடுநிசி 2 மணி இருக்கும் நாங்கள் எங்கள் அறைக்குத்திரும்பும் போது.  என் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.  தூக்கம் வரவில்லை.  அந்த உணர்வு என்னை எங்கெங்கோ கொண்டுசென்று கொண்டிருந்தது.  படுக்கையிலிருந்து எழுந்துவிட்டேன்.  இருட்டில் என் டைரியை தேடினேன்.  உடன் பேனாவும் கிடைத்தது.  கிறுக்கத்தொடங்கினேன்.  இரண்டு பக்கங்களுக்கு நீண்டது.  என் நண்பன் என்னை கூப்பிடவில்லை என்றால் அது எப்பொழுது முடிந்திருக்கும் என்று தெரியாது. 

வாக்மேனை எடுத்து காதில் வைத்துக்கொண்டேன்.  "அடடா ஆஹா என்" "விண்ணைத்தாண்டி வருவாயா" "ஹோசானா" இப்படி ஒன்றன் பின் ஒன்றாக கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்.  தூக்கம் எப்பொழுது வந்தது என்று தெரியவில்லை.  இந்தப் பாடல்களை நான் கேட்கத்துவங்கிய நாட்களில் இருந்து என்னை தாலட்டும் பாடல்களாக மாறிவிட்டிருந்தன.

என் டைரியில் என்ன எழுதினேன் என்று எனக்கே தெரியவில்லை.  பித்துப்பிடித்தவனின் மனநிலையில் எழுதப்பட்ட ஒன்றாகவே அது இருக்கும் இந்த பதிவைப்போல்.